சென்னை: ‘குரூப் – 4’ பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும்.

தமிழக அரசு துறைகளில், குரூப் – 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு, பிப்.,11ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள் ஜூலை 30ல் வெளியாகின. இதில் 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் மதிப்பெண், இன ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விதிகளின் படி தரவரிசை செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாயிலாக 11 ஆயிரத்து 270 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம் 34 ஆயிரம் பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.இதற்கான தரவரிசை பட்டியலை இணைய தளத்தில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தரவரிசையில் இடம் பெற்றுள்ளவர்கள் நாளை முதல் தங்கள் சான்றிதழ்களை அரசு இ – சேவை மையங்கள் வழியாக பதிவேற்ற வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட, இ – சேவை மையங் களின் பட்டியல் http://www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அசல் சான்றிதழ்களை செப்.,18க்குள், ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *