தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த, தோல்வியடைந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடை பெற்றோர்கள் என ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் நேற்று 104 சேவை மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு இதுபோன்ற ஆலோசனைகளை பெற 2,300 பேர்கள் மட்டுமே தொடர்பு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடையும் மாணவ மாணவிகள் சிலர் தற்கொலைக்கு முயன்று வருவதை தடுக்க கடந்த 3 நாட்களாக ‘104’ மருத்துவ உதவி சேவை மையம் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு அரசு மனநல டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
‘தேர்வில் தோல்வி அடைவதும், மதிப்பெண் குறைவாக எடுப்பதும் சாதாரண விஷயங்கள் என்றும் இதற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் இதோடு வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதாமல் இனிமேல் செய்யக்கூடிய சாதனையை நோக்கி மாணவர்கள் செல்ல வேண்டும் என்பது போன்ற தன்னம்பிக்கை கொடுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்த ஆலோசனை காரணமாக பல மாணவ, மாணவிகள் தெளிவு பெற்றதாக தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் ஒருசிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வந்துள்ள செய்திகள் கவலைக்குரியவையாக உள்ளது.
English Summary: 24 hours Advise giving control room is active now due to +2 Exam Results. Counselling is given through “104” service to all students.