மருத்துவம், பொறியியல் போன்ற பல படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் தகுதித்தேர்வு நடத்துவது போல் மக்களை ஆளும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்றும் அவ்வாறு நடத்தினால்தான் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் வெளிநடப்புகள், கூச்சல், குழப்பங்கள் இல்லாமல் சுமுகமாக நடை பெறும் என்றும் இதுகுறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்பிரமணிய பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் செயலர் ஆர்.லெட்சுமி நாராயணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப் பதாவது:
நாடாளுமன்றம், சட்டப்பேரவையின் நடைமுறைகள் தெரியாதவர்கள் எம்பி, எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு ஆளுநர், சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவரின் அதிகாரங்கள் குறித்து தெரிவதில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் ஒவ்வொரு வரும் குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு தேர்தல் ஆணையம் தனித்தேர்வு நடத்த வேண்டும். எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவோருக்கு ஆளுநர், சபாநாயகர், எம்எல்ஏக்களின் அதிகாரங்கள், கடமைகள் குறித்து தேர்வு நடத்தி, அதில் 35 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களை மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
எம்பி தேர்தலில் போட்டியிடுவோருக்கு குடியரசுத்தலைவர், சபாநாயகர், எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள், கடமைகள் குறித்து தேர்வு நடத்தி, இதில் 40 மதிப்பெண் பெறுபவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் தாய்மொழியில் வழங்க வேண்டும். இந்த தேர்வுக்கு தேவையான புத்தகங்களை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றிபெற்று எம்பி, எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுபவர்களால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் வெளிநடப்பு, கூச்சல் குழப்பம் இல்லாமல் சுமுகமாக நடைபெறும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
English Summary: R.Lakshmi Narayanan Secretary of Subramaniya bharathiyar Foundation Sends a letter to Election commission of India that Eligibility Exams Needed for MLA and MP Elections