தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பி.டி.எஸ். இடமும் காலியாக உள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வுக்கு 1,880 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 252 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரியில் காலியாக இருந்த 2 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 19 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் 18 நிரம்பியது. ஒரு இடம் காலியாக உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்த 9 பி.டி.எஸ். இடங்களில் 8 இடங்கள் நிரம்பின.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறுகையில், தனியார் கல்லூரியில் காலியாக உள்ள ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமானது பழங்குடியினருக்கானது.
அந்த இடத்தை நிரப்புவதற்கு பத்து மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வின்போது, ஒரு எம்.பி.பி.எஸ். இடமும் நிரப்பப்படும்.
அதே போன்று காலியாக உள்ள ஒரு அரசு பிடிஎஸ் இடம், வரும் 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வின்போது நிரப்பப்படும் என்று தெரிவித்தனர்.