கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்களின் வசதியை முன்னிட்டு ஐஆர்சிடிசி ‘பாரத தரிசன ரயில்’ என்ற சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு காண்பிக்கும்.

இந்த திட்டத்தின்படி விரைவில் இரண்டு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முதல் ரயில் ஜூன் 15 அன்று இயக்கப்படுகிறது. ஜூன் 15ஆம் தேதி மதுரையிலிருந்து கிளம்பும் பாரத தரிசன ரயில் கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக ஜெய்பூர், தில்லி, மதுரா, ஆக்ரா, காசி, கயா ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் நபர் ஒருவருக்கு ரூ 9 ஆயிரத்து 940 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி இரண்டாவது ரயில் ஜூன் 30ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து ஜூன் 30 ஆம் தேதி புறப்பட்டு கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக நந்தியாலில் உள்ள மகாநந்தி, யாதகிரிகுட்டாவிலுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி, புஞ்சுகுட்டாவில் உள்ள சாய்பாபா, பத்ராசலத்திலுள்ள ஸ்ரீ ராமர், விஜயவாடாவிலுள்ள கனக துர்கா, அன்னாவரத்திலுள்ள சத்ய நாராயண சுவாமி, சிம்மாச்சலத்திலுள்ள நாராயண சுவாமி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூ 5 ஆயிரத்து 800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணத்தில் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் அரங்கம், சுற்றி பார்ப்பதற்கான வாகனம் ஆகிய வசதிகளும் அடங்கும் என்பது. மேலும், பயணிகளின் உடைமைகள் பாதுகாப்பு வசதி, இசை, அறிவிப்புகளுக்கேற்க ஒலி பெருக்கி வசதி, ஒவ்வொரு ரயில்பெட்டிகளுக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி, எல்எஃப்சி உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தச் சுற்றுலாவுக்கு செல்ல விரும்பும் பயணிகள் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் : 044-64594959, 9003140681,9003140718
காட்பாடி ரயில் நிலையம் : 9840948484
மதுரை ரயில் நிலையம் : 0452-2345757, 9003140714
கோவை ரயில் நிலையம் : 9003140680

மேலும் இந்த சுற்றுலா குறித்த முழு விபரங்களை www.irctctourism.com என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English Summary: To Travel around India during Holidays, Indian Railways has introduced “Bharat Dharshan Train”.