தற்போதைய காலகட்டத்தில் மெடிக்கல் சீட்டை பெறுவதற்கு தேவையான ரிஸ்க் மற்றும் செலவு எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கும் இருக்கின்றது என்பதே பலரது கருத்து. ஒருசில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. விண்ணப்பங்களை பெற முந்தைய நாள் இரவே பெற்றோர்கள் வரிசையில் காத்திருப்பது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் சேர்க்கை நடைபெறுகிறது. ஆரம்பத்தில் மாநகராட்சி பள்ளிகளில் இந்த வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க தயங்கி வந்த போதிலும் தற்போது அதிகளவில் மாநகராட்சி பள்ளிகளிலும் எல்.கே.ஜி வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயாராகிவிட்டனர். இதை நிரூபிப்பதுபோல் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 5,424 பேர் சேர்க்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை 6,084 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இன்னமும் மாணவர் சேர்க்கை நடந்து வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள 284 மாநகராட்சிப் பள்ளிகளில், 175 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்த வசதியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு 65 பள்ளிகளில் தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளதால் 175 பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மகாகவி பாரதி நகர், ஜெ.ஜெ.நகர், ஹரிநாராயணபுரம், பீட்டர்ஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5-க்கும் குறைவாக உள்ளது. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயராவிட்டால் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : When compared to previous year, this year L.K.G has more admission.