Wifiமத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அதிகரிதுள்ள தகவல் தொழில்நுட்ப துறையின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப புதுப்புது சலுகைகளை வழங்கி வருகிறது. மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் பேருந்து, ரெயில், விமானம் பயணங்களின் போதும் பொதுமக்கள் தங்களுடைய தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வசதி தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இண்டர்நெட் வசதி இல்லாத இடத்தில் கம்பி இல்லா சேவையான வைபை வசதி, தகவல் பரிமாறுவதற்கு பெரிதும் உதவுகிறது. சென்னையில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பி.எஸ்.என்.எல். வைபை வசதியை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 4 இடங்களில் வைபை வசதி அமைக்க திட்டமிட்டுள்ளது.

பிராட்வே பேருந்து நிலையம், மைலாப்பூர் பூங்கா, அரசு அலுவலகங்கள் உள்ள கே.கே. நகர் மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் இம்மாத இறுதிக்குள் வைபை வசதி அளிக்கப்படும் என்று சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் கலாவதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் மேலும் 25 இடங்களில் வைபை வசதி அளிக்க இடங்களை தேர்வு செய்து வருகிறோம். மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட வைபை வசதி குறித்து பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புதிதாக அமைக்கப்படும் வைபை வசதி 200 மீட்டர் சுற்றளவிற்கு தகவல் பரிமாற்றம் செய்வதற்கு உதவி செய்யும். இதன் வேகம் 8–ல் முதல் 10 எம்.பி.பி.எஸ். ஆக இருக்கும்.

பொதுமக்கள் அதிக அளவு கூடக்கூடிய இடங்கள் எவை என கண்டறிந்து அங்கெல்லாம் வைபை வசதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு மையங்கள் போன்ற இடங்களில் இந்த வசதியை மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் ரூ.1500–க்கு பி.எஸ்.என்.எல். மோடம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் ரூ.100 சலுகையாக பில் தொகையில் கழிவு செய்யப்படும் என கலாவதி தெரிவித்துள்ளார்.

English Summary: 4 places Wi-Fi facility in Chennai. BSNL notice.