தமிழகத்தில் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 25,814 பேருக்கு ரேண்டம் எண் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 6-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்ட நிலையில் இந்தப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,318, தனியார் கல்லூரிகளில் 535 இடங்கள் என மொத்தம் 2,853 இடங்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 25,814 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் 10 இலக்கங்களைக் கொண்ட ரேண்டம் எண், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ரேண்டம் எண்ணை வெளியிட்டு மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மொத்த விண்ணப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நீங்கலாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் வழங்கப்படும். மொத்த விண்ணப்பங்களில் தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படும்.
தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண் பெறும் மாணவர்கள், அவர்கள் பிளஸ் 2 தேர்வில் உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண், வேதியியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண், 4-ஆவது விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த 4 அம்சங்களில் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் சமவாய்ப்பு எண்ணில் அதிக மதிப்புள்ள எண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவர்கள் தங்களுக்கான ரேண்டம் எண்ணை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் விண்ணப்ப எண்களைப் பதிவு செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டதும் ஜூன் 20-ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும். முதல்நாளில் விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 21-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். ஜூன் 25-ஆம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்’ என்று கூறினார்.
English Summary : Random numbers distributed for Medical counseling. Counseling starts at 20th June.