இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கு நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வைகயில் சென்னை மெரீனா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மே-17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகில் மே 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தூதரக அதிகாரிகள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பொரும் அளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறும் வகையில் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு திருமுருகன் கூறினார்.

English Summary: Memorial Day is celebrated by May-17 Social Activity Group in Chennai Marina Beach.