11th-std
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கத்தில் பல தனியார் பள்ளிகள் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் பிளஸ் 2 பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகளும் நடத்துவதாகவும் இதனால் பொறியியல் முதலாண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைவதாகவும் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு பிளஸ் 2 வகுப்பை போல பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த முறை ஆந்திர மாநிலத்தில் இருப்பதால், அதே போன்று தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அந்தந்த வகுப்புகளுக்குரிய பாடங்களை சரியாக நடத்தி வருகின்றனர். ஆனால் ஒருசில தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் இருந்தே பிளஸ் 2 பாடங்களைப் படித்து வருவதால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும், ஐஐடி போன்ற நுழைவுத்தேர்வுகளிலும், உயர் கல்வி படிக்கும்போதும் திணறி வருகின்றனர். மேலும் இவ்வகை மாணவர்களால் அரசுப் பள்ளிகளில் முறையாக படித்த மாணவர்கள் உயர்கல்விக்கு தங்களது வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை பொறுத்த வரையில் ஆந்திர மாநிலத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு சதவீதத்தினர் கூட இந்தக் கல்வியாண்டில் தமிழகத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு ஒரே காரணம் பிளஸ் 1 வகுப்பு பாடங்களை மாணவர்கள் படிக்காததுதான்.

ஆந்திர மாநிலத்தவரின் தேர்ச்சி அதிகமாக இருப்பதற்கு அங்கு பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதே காரணம். எனவே தமிழக அரசும் இதைத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு, நடப்புக் கல்வி ஆண்டிலேயே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

English Summary : Plus 1 common exam class . Federal Panel Urges Education.