postal_logoதற்போது வங்கி ஏ.டி.எம்களும், அஞ்சலக ஏ.டி.எம்களும் தனித்தனியாக் இயங்கி வரும் நிலையில் இன்னும் ஆறு மாதங்களில் அஞ்சலக ஏ.டி.எம். அட்டைகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

சென்னை பூங்கா நகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய ஏடிஎம் மைய திறப்பு விழாவில் கலந்து மெர்வின் அலெக்ஸாண்டர் பேசியதாவது:-

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை எனும் “கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய அஞ்சல் நிலையங்களில் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் 445 ஏடிஎம் மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், தமிழக அஞ்சல் வட்டத்தில் 55-ம், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 16-ம், சென்னை மாநகரில் 9-ம் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 94 மையங்கள் மார்ச் இறுதிக்குள் திறக்கப்படும். 54 ஆயிரம் ஏடிஎம் அட்டைகள் விநியோகம்: தமிழக அஞ்சல் வட்டத்தில் 54 ஆயிரம் பேருக்கும், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 16 ஆயிரம் பேருக்கும் ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 33.53 கோடி அஞ்சல் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் சுமார் 2.51 கோடியும், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 52 லட்சம் கணக்குகளும் உள்ளன. அஞ்சலக சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் கோர் பேங்கிங் சேவை வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அஞ்சலக ஏடிஎம் அட்டையை பயன்படுத்தவும், மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் அஞ்சலக ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் 6 மாத காலத்துக்குள் வசதி ஏற்படுத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

English Summary: Postal ATMs connected with bank ATMs in 6 months.