flood-14112015-1கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்கு புகுந்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பொதுமக்கள் மிகுந்த அவதியில் உள்ளனர். புழல் பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 15 செ.மீ. மழையும் பெய்துள்ளது. தரமணி, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

நேற்று முன் தினம் மாலை முதல் நேற்று மதியம் வரை தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரம்பூர், வியாசர்பாடி, என்னூர், தி.நகர், ஓட்டேரி, கிண்டி, மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பெருமளவு பாதிக்கபப்ட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக செல்கின்றன. ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில், விரைவு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் செம்மஞ்சேரி பகுதியில் ஜவகர் நகர், எழில்முக நகர், ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகர், அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர் சிவலிங்கபுரம் வ.உ.சி தெரு, மாதவரம் மண்டலத்தில் கணேசபுரம், தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட் பட்ட கொருக்குப்பேட்டை, அதே மண்டலத் தில் 38-வது வார்டில் நேதாஜி நகர், 39-வது வார்டில் அண்ணாநகர் பள்ளம், 41-வது வார்டில் எம்.ஜி.ஆர்.நகர், 42-வது வார்டில் அம்மன் நகர், 47-வது வார்டில் சிங்கத்தாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

மழைநீர் சென்னையின் பல பகுதிகள் தேங்கியுள்ளது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது, “மழை நீரை அகற்ற, குடிநீர் வாரியத்தின் 43 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 60 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 150 தூர் வாரும் இயந்திரங்களைக் கொண்டு, பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டது. ஒரு சில பகுதிகளில் வடியாமல் உள்ள மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் தொற்றுநோய்களை தடுக்கும் வகையில் 41 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 4,899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் கண்ட 167 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. வியாழக்கிழமை 48 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன’ என்று கூறினர்.

சென்னை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் தேங்கியதால் சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பயணிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 7 செ.மீ, தாம்பரத்தில் 6 செ.மீ மழை பதிவாகியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு ஜிஎஸ்டி சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. குரோம்பேட்டை எம்ஐடி பாலம், காவல் நிலையம் அருகில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் நெரிசலின்றி விரைவாக சென்றன.

ஆனால், விமான நிலைய ஓடுதள பகுதியை அடுத்த ஜிஎஸ்டி சாலை – சிமென்ட் சாலை சந்திப்பு மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி இடையில் இரண்டு இடங்களில் சாலையில் சுமார் ஒரு அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீரில் வாகனங்கள் மெதுவாக சென்றதால், விமான நிலையம் முதல், சிமென்ட் சாலை சந்திப்பு வரை ஜிஎஸ்டி சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
English summary-Rain continues in chennai flood all over the city.