தமிழகத்தில் வரும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து விரைவில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ரேசன் கார்டு இல்லாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இரண்டே மாதத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.லிங் கமுத்து, “புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 6 மாதங்கள் ஆகியும் கிடைப்பதில்லை. காலதாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ‘‘கடந்த 4 ஆண்டுகளில் 12 லட்சத்து 92 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 2 மாதத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும். விசாரணை என்ற நிலையில், ஆய்வுக்கு செல்லும்போது வீட்டில் ஆள் இல்லாத காரணம் போன்ற காரணங்களால் தாமதம் ஏற்படலாம். அம்மா முகாம்களிலும், மாதத்தின் 2-வது சனிக்கிழமை நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் ரேஷன் அட்டை கேட்டு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் அவற்றை பெறும் நோக்கில் தனித்தனி ரேஷன் அட்டை பெற மக்கள் விரும்புகின்றனர்’’ என்று கூறினார்.
மேலும் தமிழக மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு (மின்னணு குடும்ப அட்டை) தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100 ரொக்கம், ரூ.60 மதிப்புள்ள அரிசி, சர்க்கரை என மொத்தம் ரூ.160 மதிப் புள்ள பொங்கல் பை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டில் ஏற்படும் வறட்சி, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட இயலாத நிலையை தவிர்க்கும் வகையில் தேவை அடிப்படையில் பொங்கல் பை வழங்கப்படுகிறது.
தற்போது இருக்கும் ரேஷன் கார்டுகளை மாற்றி ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் திட்டத்துக்காக ரூ.318 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சோதனை அடிப்படையில் சென்னை, திருச்சி மாவட்டங்களில் 39 ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் சட்டமன்றத்தில் கூறினார்.
English Summary : Ministers informed that Ration card will be provided in 2 months if relevant documents was submitted.