milk-feed-rooms-1பொது இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த நிலையில் நேற்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் பெண்களின் வசதிக்காக 5 தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தாய்மார்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாதுகாப்பாக பாலூட்டுவதற்காக இந்த அறைகளில் வசதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு இந்த பிரத்யேக வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆம்னி பஸ் நிலையத்திலும் பாலூட்டும் பெண்களுக்கு தனி அறை நேற்று திறக்கப்பட்டது. முற்றிலும் குளுகுளு வசதியுடன் கூடிய வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழும மேற்பார்வை பொறியாளர் சீனிவாச ராவ் (சி.எம்.டி.ஏ) திறந்து வைத்தார். பாலூட்டும் அறையில் பெண்கள் பாதுகாப்பாக சென்று, குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக 24 மணி நேர பாதுகாப்புக்கு அங்கு பெண் ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில பொருளாளர் மாறன் கூறியதாவது, “சென்னையில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 350 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சராசரியாக தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். நீண்ட தூரம் செல்லக்கூடிய பெண் பயணிகள் ஆம்னி பஸ் நிலையத்தில் காத்து இருக்கிறார்கள்.

கையில் குழந்தையுடன் வரும் பெண்கள் பாலூட்டுதவதற்கு வசதியாக தனியாக ஒரு அறையை சி.எம்.டி.ஏ. அமைத்து கொடுத்துள்ளது பாராட்டுதலுக்குரிய செயலாகும். இதனால் பாலூட்டும் பெண்கள் மற்றவர்கள் அருகில் இருக்கிறார்களே என்ற தயங்க தேவையில்லை.

இதற்காக அமைக்கப்பட்ட தனி அறைக்கு சென்று குழந்தையின் பசியை ஆற்றலாம். ஒரு குழந்தைக்கு தாய் செய்ய வேண்டிய கடமையை தனிமையில் பாதுகாப்பாக செய்யக்கூடிய வசதியை உருவாக்கி தந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
English summary – Rooms for mothers to breastfeed babies inaugurated at Chennai Koyambedu omni Bus depot.