malabar-coast-1இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கூட்டு முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ‘மலபார் கூட்டு கடற்பயிற்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இந்த பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டு பயிற்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படை போர்கப்பல்களில் ஒன்றான ஐ.எஸ்.எஸ்.ஷிவாலிக் கப்பலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் உயரதிகாரிகள் பி.கே.வர்மா, எஸ்.வி.போக்ரே, அமெரிக்க கடற்படையின் உயரதிகாரிகள் சி.வில்லியம்ஸ், ஜே.பி.அக்யான், ஜப்பான் கடற்படையின் உயரதிகாரிகள் மோராகோவா, அஷியனோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் இந்திய கடற்படை உயரதிகாரி பி.கே.வர்மா நிருபர்களிடம் கூறியபோது, “இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி இந்த ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. இதில், முதல் 2 நாட்கள் துறைமுகத்திலும், 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 4 நாட்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டின் போர்க்கப்பல்களின் செயல்பாடுகள், நீர்மூழ்கி கப்பல் தடுப்பு போர் பயிற்சி, வான்வெளி தாக்குதலை எதிர்கொள்வது, படகு ரோந்து மூலம் கடல் எல்லையில் அத்துமீறி நுழைபவர்களை கையும், களவுமாக பிடிப்பது, கடலில் மூழ்குபவர்களை தேடுவது, மீட்பது உள்பட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கா கடற்படை உயரதிகாரி சி.வில்லியம்ஸ் கூறும்போது ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுடன் நல்லுறவை பேணிக்காத்து வருகிறார். அவருடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த கூட்டு பயிற்சி அமைந்து வருகிறது. இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கூட்டுபயிற்சியை மேற்கொள்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

ஜப்பான் கடற்படை அதிகாரி மோராகோவா பேசியபோது, ‘எங்கள் நாட்டுக்கு கடந்த ஆண்டு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவும்-ஜப்பானும் பாதுகாப்பு அம்சத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அந்தவகையில், இந்தியாவுடன் மீண்டும் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சியில் ஜப்பான் கைக்கோர்த்திருப்பது சிறப்பு அம்சமாகும். எதிர்காலங்களிலும் அமெரிக்கா, இந்தியாவுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியை மேற்கொள்ள ஜப்பான் ஆவலாகவே உள்ளது’ என்று கூறினார்.

மலபார் கூட்டு கடற்பயிற்சியில், ஐ.என்.எஸ்.ஷிவாலிக், ஐ.என்.எஸ். ரன்விஜய், ஐ.என்.எஸ்.பேத்வா, ஐ.என்.எஸ்.சக்தி, ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் ஆகிய 5 இந்திய கடற்படை போர் கப்பல்களும், யு.எஸ்.எஸ். தேடோதர் ரூஸ்வெல்ட், யு.எஸ்.எஸ். நார்மண்டி, யு.எஸ்.எஸ். போர்த் வோர்த், யு.எஸ்.எஸ். சிட்டி ஆப் கர்பஸ் கிருஸ்டி, யு.எஸ். கேரியர் விமானம் தாங்கிய கப்பல் என அமெரிக்க நாட்டின் 5 போர் கப்பல்களும், ஜப்பான் நாட்டின் ஜெ.எஸ்.பியூஜிகி போர் கப்பலும் கலந்துகொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
English summary – U.S,Japan,India Participate Off the Coast Malabar.