water-logged-241115-1சென்னையில் கடந்த 10 நாட்களாக பெய்து வந்த கனமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நின்றதால் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்ததால் சென்னையே கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் நீரே இன்னும் பல இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்ததால் சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

நேற்று மாலை 6 மணி அளவில் சென்னையின் முக்கிய பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, அண்ணாசாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்ததால் முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடின. இதனால் அலுவலகங்களில் பணி முடித்து திரும்பும் மக்கள் அவதிப்பட்டனர். ஏற்கெனவே தேசமடைந்துள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல சிரமமடைந்தனர்.

பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மாநகர பேருந்துகள் இயக்குவதில் சிரமமாக இருந்தது. தி.நகரில் துரைச்சாமி சாலையில் உள்ள சப்-வே தண்ணீரில் மூழ்கியதால் மாற்று பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை வாகனங்கள் செல்ல மூன்று மணிநேரம் ஆனது. கிண்டி ரயில்வே நிலையம் அருகில் வெள்ள நீர் சூழ்ந்ததும் இதற்கான ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 20 செ.மீ. மற்றும் காரைக்காலில் 19 செ.மீ மழை பதிவானதாகவும் ரமணன் கூறினார். மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியைத் தாண்டி பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகத்தில் சராசரியாக 47 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary- Schools & colleges remain closed today due to heavy showers