bankstrikeமத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை சமீபத்தில் மத்திய தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை இந்தியாவின் பல்வேறு தொழில் சங்கங்கள் ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ள சம்மதித்த நிலையில், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்களின் உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், முதலாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது.

தொழிலாளர் சட்டங்களில் முதலாளிகளுக்கு சாதகமான வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய துறைகளில் அளவுக்கு அதிகமான வகையில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 2-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களும் பங்கேற்கின்றன.

இவ்வாறு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள இருப்பதால், அன்றைய தினம் வங்கி பணிகள் பெருமளவு பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி தங்களுடைய முக்கிய வங்கி பணிகளை முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

English Summary:Sep 2, All India Bank Employees participation in a strike.