flimwriter25116தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம் ஆகியவற்றுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக திரைப்பட இயக்குநர் விக்ரமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். எழுத்தாளரும், இயக்குநருமான விசு கடந்த 4 ஆண்டுகளாக பதவியில் இருந்து வரும் நிலையில் இச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தியது. இதன்படி சென்னையில் இன்று தேர்தல் நடைபெற்றது.

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி சமுதாய நலக் கூடத்தில் காலை 9 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் 292 சங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இயக்குநர் விக்ரமன் 205 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மோகன் காந்தி ராமன் 86 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இந்த சங்கத்தின் செயலாளராக எழுத்தாளரும், பாடலாசிரியருமான பிறைசூடன் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குகநாதன் 141 வாக்குகள் பெற்றார்.

துணைத் தலைவர்களாக பஞ்சு அருணாச்சலம் மற்றும் இயக்குனர் யார் கண்ணன் அவர்களும் இணைச் செயலாளர்களாக விக்ரமன் அணியைச் சேர்ந்த வி.பிரபாகர். டி.கே.சண்முகசுந்தரம். சி.ரங்கநாதன். பா.விஜய் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர். பொருளாளராக இயக்குனரும் நடிகருமான ரமேஷ்கண்ணா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

English Summary: South Indian Film Writers Association Election Results.