வரும் கல்வியாண்டான 2016-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை பெறும் போது, அத்துடன் அந்த மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என தமிழக அரசு தேர்வுத்துறை அதிரடியாக இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது. இந்த தேர்வை எழுதும் மாணவர்களின் விபரங்களை அதற்கு முன்னதாக உறுதி மொழி படிவத்தில் அரசு தேர்வுத்துறை பெறுவது வழக்கம். தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விபரங்களை உறுதி மொழி படிவத்தில் பெற்று, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்ராதேவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது: “பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர் மற்றும் அவரது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அந்த மாணவரின் முழு பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், பெற்றோர் மற்றும் காப்பாளர் விபரங்களை உறுதி மொழி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் உறுதி மொழி படிவத்தில் தேர்வு எழுதும் மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாணவனுக்கு ஆதார் எண் இல்லை என்றால் அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை கட்டாயம் உறுதி மொழிபடிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இறுதியாக மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் அந்த உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து பெற வேண்டும்.

உறுதி மொழி படிவத்தில் உள்ள விபரங்களை வகுப்பு ஆசிரியர்கள் ஒரு முறைக்கு, இரு முறை சரிப்பார்த்து கையெழுத்திட வேண்டும். இவற்றை பள்ளி தலைமையாசிரியர் சரிப்பார்த்து இறுதியில் கையெழுத்திட்டு அரசு தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றில் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” கூறப்பட்டுள்ளது.

English Summary : Students must provide Aadhar card for 2016 +2 exams