வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானவரிச் சட்டத்தின் கீழ், தணிக்கை தேவைப்படாத பிரிவினா் நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய, கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆன்லைன் மூலம் வருமானவரி தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரி செலுத்துபவர்கள் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர்.
இதையடுத்து, வருமானவரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234எப் பிரிவின் படி, வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு கட்டணம் ஏதும் இல்லை.
மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு அதே சமயம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரிக் கணக்கை வரும் 31-ம் தேதிக்குப் பிறகு, ஆனால் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரிக் கணக்கை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.