Election_Commission_logo19116

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை அடுத்து, 15.9.2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேபனைக்கான விண்ணப்பங்கள் 15.9.2015 முதல் 24.10.2015 வரை பெறப்பட்டு வந்தன.

இந்தப் பணிகள் முடிவடைந்ததும் 11.1.2016 அன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது. ஆனால் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக, பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேபனைக்கான விண்ணப்பங்களை முடிவு செய்வதற்கான காலத்தையும், இறுதி பட்டியலை வெளியிடுவதற்கான காலத்தையும் நீட்டிக்கவேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

எனவே இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் தேதியும் 11.1.2016 -ல் இருந்து 20.1.2016 ஆன் தேதிக்கு அதாவது நாளை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளை அதிக அளவில் சேர்ப்பதற்கான பிரசாரத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இந்த முயற்சியின் காரணமாக சில ஆண்டுகளாக, சுமார் 15 லட்சத்தில் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

எனவே நாளை வெளியாகும் வாக்காளர் இறுதிப் பட்டியலில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள வாக்காளர் எண்ணிக்கை 5.62 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

English Summary: Tomorrow the final voter list. Notice of Election Commission.