திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை பார்வை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் பார்வை செய்ய அனுமதி வழங்கிவந்தது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பல கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய துணிகளை வரும் 13-ந் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், துணிகள், உண்டியலுக்கு பயன்படுத்தும் துணிகள், ரவிக்கைத் துணிகள், மேல்துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை, பஞ்சாபி ஆடைகள், ஜமுக்காளம், போர்வைகள், திரைச் சீலைகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட உள்ளன.

இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய www.tirumala.org, www.mstce commerce.com/ www.mstcindia.co.in ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *