பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 5,191 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி (இயன்முறை மருத்துவம்), பிஓடி உள்ளிட்ட 15 துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, தனியார் கல்லூரிகளில் 12,000-த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

40,000 விண்ணப்பம் அச்சடிப்பு: இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரி கூறுகையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (செப். 10) தொடங்கியது. செயலர், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம்’ என்ற முகவரிக்கு ரூ. 400-க்கு வரவோலை எடுத்து அதை தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், உள்இடஒதுக்கீடு பெற்ற அருந்ததியினர் சான்றொப்பமிட்ட தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, www.tnhealth.org www.tnmedicalselection.org ஆகிய இணையதங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செப். 20-ஆம் தேதி கடைசி நாள்: செப்டம்பர் 19-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

5,191 விண்ணப்பம் விநியோகம்: மாநிலம் முழுவதும் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை 5,191 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *