பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில் இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெற்ற கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதிய மாணவ, மாணவிகளை சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்வதை தடுக்க தகுந்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 140 அரசு உதவி பெறும் கல்லூரிகள், மற்றும் தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி ஏராளமானோர் விண்ணப்பித்தனர். மாணவ, மாணவிகள் அதிகளவில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்ததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் அளவுக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அளவுக்கும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத அளவுக்கும் இடங்களை அதிகரிக்க சென்னை பல்கலைக்கழகம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு வந்த மகிழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடனும் காணப்பட்தாகவும் பல கல்லூரிகளில் புதிய மாணவ மாணவிகளை சீனியர் மாணவ- மாணவிகளும், பேராசிரியர்களும் மலர் கொத்து கொடுத்து வரவேற்றதாகவும் தகவல்கள் வந்துள்ளது. வேப்பேரி ஜெயின் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளை சீனியர் மாணவிகள் கைகுலுக்கி வரவேற்று கல்லூரிக்குள் அழைத்து சென்றனர்.
புதிய தோழிகளுடனும் கல்லூரி வளாகத்தில் நின்ற படியும் முதலாம் ஆண்டு மாணவிகள் செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். இன்று அவர்களுக்கு பாடம் நடத்தப்படவில்லை. ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் மாணவிகளுக்கு கல்லூரி படிப்பு, மற்றும் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினர்.
கல்லூரி இன்று திறக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்களில் மாணவிகளை ராக்கிங் செய்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ராக்கிங்கை தடுப்பது குறித்தும், நடவடிக்கை எடுப்பது பற்றியும் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
English Summary: Arts and Science Colleges in Tamil Nadu were opened today. Police protection to prevent ragging.