தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார்.
பழைய அரசாணை:
பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றி வந்த கிராம உதவியாளர்களை 1-6-95 முதல் முழுநேர அரசுப் பணியாளர்களாக மாற்றி அமைத்து 6-7-95 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 29-11-10 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், கிராம உதவியாளராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், அலுவலக உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் தகுதியின் அடிப்படையில் 10 சதவீதம் மட்டும் பணிமாற்றம் மூலம் பதவி உயர்வு வழங்கலாம் என்று கூறப்பட்டது.
அமைச்சர் அறிவிப்பு:
இந்த நிலையில், சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 8-8-14 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10 ஆண்டுகள் கிராம உதவியாளராகப் பணி முடித்த தற்போது தகுதியாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீதம் பதவி உயர்வு அளித்து அந்த இடங்கள் நிரப்பப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
அமைச்சரின் பரிந்துரை ஏற்பு:
வருவாய் நிர்வாக ஆணையரின் பரிந்துரைக் கடிதத்தில், கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான கிராம உதவியாளர்கள் இல்லை என்றால், அந்தக் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் அறிவிப்பு மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற ஆணையை அரசு பிறப்பித்துள்ளது.