பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு அருகே நாள்தோறு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அந்த பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு இரட்டை மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக நெடுஞ்சாலை துறை ரூ.117 கோடியில் பாலம் கட்டுவதற்காக மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு பெற்றது. பின்னர் இந்த பாலத்திற்காக ஒதுக்கப்பட் நிதியினால் இந்த பணி தொடங்கப்பட்டது. மேலும் இந்த பாலத்தை நெல்சன் மாணிக்கம் சாலை வரை நீட்டித்து கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பாலத்தின் பணிகளை ஆரம்பிக்கும் முன்னர் அந்த பகுதியில் இருந்த கடைகள், வீடுகள் அகற்றப்பட்டு பணிகளை தொடங்கிய நிலையில் பாலத்தின் வசதிக்காக
அண்ணா வளைவை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் பொது மக்கள் அண்ணா வளைவை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி கடந்த 2013ஆம் ஆண்டு மாற்று வழியில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த மேம்பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், வரும் மார்ச் மாதம் இந்த பாலத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாலம் அண்ணா வளைவுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மேல்பக்கமும், கீழ்பக்கமும் உயரமாக செல்லும் வகையில் மிகவும் நேர்த்தியாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணா நகருக்கு செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை எளிதில் கடந்து செல்ல உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
English Summary: New Flyover to be opened in March near Anna Rountana.