செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வசதி அடிக்கடி செல்போன் நிறுவனங்களை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
மத்திய அரசு செல்போன் நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ரிலையன்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இந்தப் புதிய வசதியை வழங்கவுள்ளன. இதுவரை மாநில அளவில் மட்டுமே இந்த வசதி செயல்பாட்டில் இருந்த நிலையில் இன்று முதல் இந்த புதிய வசதி இந்தியா முழுவதற்கும் அமலுக்கு வந்துள்ளதால், இனி கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள் புதிதாக சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த புதிய வசதியை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர்.
மேலும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என்றால் உடனடியாக நாம் விரும்பு வேறு நிறுவனத்திற்கு மாறி கொள்ளலாம். நாம் பயன்படுத்திய பழைய நம்பர் போய்விடும் என்ற கவலை இனி இல்லை. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்தின் இணைப்பை மாற்ற வேண்டுமானால் “போர்ட்” என ஆங்கிலத்தில் டைப் செய்து அதனுடன் சந்தாதாரரின் செல்போன் எண்ணையும் டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் உடனே ரகசிய எண்கள் கொண்ட பதில் எஸ்.எம்.எஸ். வரும். அந்த ரகசிய எண்ணை நீங்கள் விரும்பும் செல்போன் நிறுவனத்துக்கு தெரிவித்து விட்டால் உங்கள் எண் மாறாமலேயே அந்த நிறுவனத்தின் சர்வீஸ் உங்களுக்கு ஏழு நாட்களுக்குள் கிடைக்கும்’ என டெலிகாம் ஆணையம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் ராஜேஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
English Summary : Mobile users can now change their carrier without changing their number by texting “PORT (mobile number)” to 1900.