வங்கிகளை போலவே அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் தற்போது ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நகர மண்டல அஞ்சலகத்துக்கு உள்பட்ட தி.நகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், பரங்கிமலை, தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏ.டி.எம் அட்டை பெறுவதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: அஞ்சலக வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அட்டை பெற கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் என முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஏடிஎம் அட்டை பெற அஞ்சலக சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 இருந்தாலே போதும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு அட்டை பெற எந்தவிதமான சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Post Office reduces the minimum balance for Post Office ATM Cards from Rs.5000 to Rs.500.