சிங்கப்பூர் நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டு வந்த லீ க்வான் யூ நேற்று உடல்நலமின்றி காலமானார். ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூருக்கு விடுதலை வாங்கித்தந்த தலைவர்களில் மிக முக்கியமானவர் லீ க்வான் யூ. மேலும் இவர் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரித்து தனி நாடாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1990ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 31 ஆண்டுகள் சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ க்வான் யூ, சர்வாதிகாரம் கலந்த ஜனநாயக ஆட்சியை நடத்தி வந்தார். இவருடைய சிறப்பான நிர்வாகத்திறனால் சிங்கப்பூர் சில வருடங்களில் செல்வ செழிப்புள்ள நாடாக மாறியது.

இந்நிலையில் 91 வயதாகும் லீ க்வான் யூ, கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. லீ க்வான் யூ மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட உலகத் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ‘நான் மிகவும் மதிக்கும் அரசியல் தலைவர் ஒருவர் மறைந்துவிட்டதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். அவருடைய இழப்பு சிங்கப்பூர் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும்’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த், லீ க்வான் யூ குறித்து பல பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.