சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை 18%ஆக குறைந்துள்ளது. போதையில் வாகனம் ஒட்டிய சுமார் 16,616 பேரின் ஓட்டுனர் உரிமை ரத்து செய்யபடும் என்றும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.
சென்னையில் விபத்துக்களை தடுக்க வார நாட்களில் 62 சந்திப்புகளில் வாகன சோதனை நடக்கிறது. மேலும் விடுமுறை நாட்களில் 124 சந்திப்புகளில் வாகன சோதனை நடக்கிறது. இது மட்டும் இல்லாது சட்ட ஒழுங்கு மற்றும் மாநகர காவல் துறை தனி தனியாக வாகன சோதனை நடத்துகின்றனர்.
சென்னை மாநகரில் காவல் துறையின் கடுமையான நடவடிக்கையின் காரணமாக சாலை விபத்துக்கள் கணிசமாக குறைந்து வருகிறது. 2013ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது கடந்த ஆண்டு சுமார் 250 பேரின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது. பொதுவாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும் விபத்துக்கள் கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
போதையில் வாகனம் ஒட்டும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமையை தற்காலிக மற்றும் நிரந்திரமாக ரத்து செய்ய சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் விபத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை நகலை தபால் மூலம் அனுப்பும் திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. முதல் தகவல் அறிக்கை நகல்கள் எந்தவித காலதாமதமும் இல்லாமல் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர் போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாயை ஊதி சோதனை செய்யும் முறையை மாற்றியுள்ளனர். அவர்களை ஸ்ட்ரா மூலம் ஊதச்சொல்லி சோதனை செய்கின்றனர். பலரும் ஒரே ஸ்ட்ராவை பயன்படுத்தாமல் ஒவ்வொருவருக்கும் புது ஸ்ட்ராவை பயன்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்னை கமிஷனர் ஜார்ஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.