சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் அரசு மருத்துவமனை தோல் வங்கி வரும் மார்ச் மாதம் முதல் செயல்பட உள்ளது. இந்தத் தோல் வங்கியுடன் இணைந்து எலும்பு வங்கியும் புதிதாகத் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்திற்கு மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே தீக்காயத்துக்கான சிறப்பு மையமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது. தீக்காய சிகிச்சைகளில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை அளித்து வரும் இந்த மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்படவுள்ளதால் தீக்காயம் அடைந்த நோயாளிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் எனக் கருதப்படுகிறது.
இறந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோல் இந்த வங்கியில் சேமித்து வைக்கப்படும். ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் அவரது உடலில் இருந்து தோலை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேலுள்ள, எந்த ரத்தப் பிரிவை உடையவர்களின் தோலையும் பயன்படுத்தலாம். இவ்வாறு இறந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோல் தீக்காயமடைந்தவர்களின் காயங்களின் மீது பொருத்தப்படும். இதன்மூலம், அந்தக் காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். மேலும், தீக்காயங்களும் விரைவில் குணமாகும். ஒருவரிடம் இருந்து தோலை தானமாகப் பெற்றால், அதை ஐந்து ஆண்டுகள் வரை சேமித்து வைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் முதல் முறை: தமிழகத்தில் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மட்டுமே தோல் வங்கி உள்ளது. அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மும்பையில் செயல்படும் பிரபல தீக்காய சிகிச்சை மருத்துவமனை தோல் வங்கியை கீழ்ப்பாக்கம் மருத்துவர்கள் நேரில் பார்வையிட்ட பிறகு, அதே தரத்துடன் சென்னையிலும் இந்த வங்கி அமைகிறது. மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவமனையில் மூன்று தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு கூறியதாவது: உரிமம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உரிமம் பெற்றவுடன் தோல் வங்கி, எலும்பு வங்கிக்குத் தேவையான உபகரணங்களைப் பொருத்தும் பணி நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, மார்ச் மாதத்தில் இந்த இரு வங்கிகளும் செயல்படத் தொடங்கும் என்று கூறினார்.
English Summary: Tamilnadu’s first Skin Bank in Chennai KMC Hospital.